சிலம்புச் செல்வர் ம.பொ.சி பற்றி பேரறிஞர் அண்ணா:

“ எனக்கு இன்னும் அறுபதாண்டு ஆகாத காரணத்தால் நான் வாழ்த்துவதற்ற்கில்லை. நான் அவருடைய வாழ்த்துகளைப் பெற்றுப் போக வேண்டிய பருவத்திலே உள்ளவன் (பலத்த கைதட்டல்). அவர் நம்மை மட்டுமல்ல; நம்மையும், நாட்டையும், உலகத்திற்கு எடுத்துக் காட்ட்த்தக்க தமிழ் மொழியையும், அந்த்த் தமிழ் மொழியினுடைய ஏற்றத்தையும் எதிர்காலத்தையும் வாழ்த்தத் தக்க உரிமை பெற்றவர்கள் (கைதட்டல்).
“ஆகையினாலே அரசியல், இலக்கிய வாடை அற்றதாகவும், இலக்கியம், அரசியலைப் பற்றிக் கவனிக்காத முறையிலேயும் ஒன்றுக்கொன்று முரண்பட்டுத் தமிழகத்திலே இருந்துகொண்டு வந்த நாட்களிலே ம.பொ.சி அவர்கள் அரசியலையும் மறந்தாரில்லை. இலக்கியத்தையும் இழந்து விடவில்லை. அரசியலையும் இலக்கியத்தையும் அவர் தம்முடைய வாழ்கையிலேயே இணைத்துக் காட்டி இருக்கிறார்.
“ பல பேர் – விடுதலைப் போராட்டத்திலே ஈடுபட்டவர்கள், சுய ராஜ்யம் கிடைத்தது என்பது அறுவடைக்காலம் என்று கருதிக் கொண்டார்கள் ( சிரிப்பு கைதட்டல்) ஆனால், ம.பொ.சிவஞான கிராமணியாரவர்கள், கடைசி வரையில் உழவராகவே இருந்து தம்முடைய வாழ்நாளைக் கழித்து வருகிறார்கள் ( பலத்த கைதட்டல்).

நல்ல விதைகளையும் தந்திருக்கிறார்; வேறு பலர் அறுத்துக்கொண்டு போவதையும் பார்த்துக் கொண்டிருக்கிறார். நம்முடைய நாட்டு உழவரைப் போலவே, “ நாம் உழுதோம்; வேறு யாரோ அறுத்துக் கொள்கிறார்களே” என்று கவலைப்படாமல், நாம் உழுது கொண்டே இருப்போம்; யாராகிலும் அறுத்துக் கொண்டே போகட்டும் (சிரிப்பு); மிச்சம் மீதி எப்போதாவது நாட்டுக்குக் கிடைக்கும். அதுவரையிலே உழுது கொண்டிருக்கலாமென்று ம.பொ.சி அவர்கள் உழுது கொண்டே இருக்கிறார்கள்.
“ இலக்கியத்திலே தொடர்புள்ள பேராசிரியர்கள் பலர் அவரிடத்திலே நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள். இலக்கியத்திலே உள்ள அருமைகளை ம.பொ.சி. அவர்கள் எந்த அளவுக்கு எடுத்துக் கையாளுகிறார் என்பதைப் பார்த்து அவர்களே வியப்படைகிறார்கள். ‘நம்மாலே முடியவில்லையே’ என்று சில பேர் கொஞ்சம் வருத்தப்படக் கூடச் செய்கிறார்கள். நல்லவர்கள் அப்படி வருத்தப்பட மாட்டார்கள்; நல்லவர்களல்லாதவர்கள் தான் வருத்தப்படுகிறார்கள்” (26-6-66இல் நடைபெற்ற அய்யாவின் மணிவிழாவில் அண்ணாவின் உணர்ச்சி உரை)

This entry was posted in அறிஞர்களின் பார்வையில் ம.பொ.சி.. Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five − two =