எங்கள் தலைவர் ம.பொ.சி. – கவிஞர் கா.மு. ஷெரீப்

தமிழுக்காக உயிர் வாழ்ந்தோர் பலர் தமிழ்நலனுக்காக உயிர் துறந்தோர் மிகப்பலர்.ஆனால்,எங்கள் தலைவரோ,தமிழையே உயிராக – தமிழரின் நலத்தையே பிறவியின் குறிக்கோளாகக் கொண்டு வாழ்பவர்.

எடுப்பான மூக்கு,இதயத்தையே கவர்வது போல் நம்மைக் கூர்ந்து நோக்கும் கண்கள்,எலும்பும்-இளைத்த
உடல்,முறுக்கி விடப்படாத – இல்லை!முறுக்கிவிட முடியாத – வாளிப்பான மீசை, நடுத்தர உயரம்,தூயகதராடை….இத்தனையும் சேர்ந்த எழிலுருவில் காட்சியளிப்பவர்தான் எங்கள் தலைவர் – வருங்காலத் தமிழகத்தின் வழிகாட்டி திரு. ம.பொ. சிவஞானம்!

K.M.sheriff

வயது நாற்பத்திரண்டுதான், ஆனால், வண்டமிழ்
ஆராய்ச்சியில் அவருக்கு வயது ஆயிரம் என்றாலும் தகும்!
நோய் சதா அவரை வாட்டிக் கொண்டே இருக்கும், ஆயினும்
தமது பிரச்சார வேலையைத் தொடர்ந்து நடத்திக்
கொண்டுதான் இருப்பார்.
அடுக்குமொழிகளுடன் ஆழ்ந்த கருத்துகளை எளிய
நடையினிலே இனிமை கொஞ்சம் பேசுவதில் இணையற்ற
வீரர்.அவரது சொற்பொழிவின் முன் இளைஞர்களின்
நெஞ்சம் வெல்லப் பாகுதான்.எதிர்க்கட்சியாளர்களும்
போற்றித் தலையசைப்பது சகஜமான நிகழ்ச்சி.

அவருடைய வாழ்வே அரசியல் போராட்டமயமானது.
இந்தியாவின் விடுதலையை நோக்கமாகக் கொண்ட
காங்கிரசில் சேர்ந்து தீவிரமாக உழைத்தார். வெள்ளை
ஏகாதிபத்தியத்தை அகற்றுவதற்காக வெகு தீவிரமாய்
போராடினார். சிறையையே வீடாகவும் வீட்டையே சிறையாகவும்
தண்டனை பெற்றுக் கொடுந்துன்பமுற்றார். அந்நிய
ஆதிக்கத்தை ஒழிப்பதற்கு நம் அகில இந்தியாவுடன் தோள்
சேர்ந்து நின்று அகிம்சைப் போர் புரிந்தனர். அப்பொழுதும்
நம்மைப் பெற்றெடுத்த தமிழ்நாட்டின் பெருமைகளைப் புகழாத
நாளே இல்லை.

இந்திய தேசம் விடுதலை பெற்று விட்டது. இனி நம்
இன்பத் தமிழ்நாடு விடுதலை அடையவேண்டும். அசோக
மன்னனின் ஆட்சிக் காலத்திலுங் கூட, தனித்து நின்று
தன்னரசு செலுத்திச் சிறப்புற தமிழரசை மீண்டும் நிலைநாட்ட
வேண்டும். இடைக்காலத்திலே துண்டாடப்பட்டுப் பிரிந்து
கிடக்கும் திருவிதாங்கூர், தமிழகம், காரைக்கால், புதுச்சேரி,
கொச்சின், சித்தூர் , கோலார் தங்கவயல் ஆகிய
பகுதிகளையும் நம் தாயகத்துடன் இணைத்து, குமரி முதல்
வேங்கடம் வரையிலுள்ள புதிய தமிழகத்தை அமைத்தாக
வேண்டும். அதில் சுய நிர்ணய உரிமையுள்ள சோசலிசக்
குடியரசை நிறுவி, ஏழ்மையும், சுரண்டலும், சாதிமதப்
பிளவுகளுமற்ற புதிய சமுதாயத்தை உருவாக்க வேண்டும்.
இந்த அரும்பணியைச் செய்து முடிப்பதற்காகவே தமிழரசுக்
கழகத்தை தோற்றுவித்து தன்னலம் கருதாது பாடுபட்டு
வருகிறார் தலைவர் ம.பொ.சி.

கட்சிக்கென்று நிதியில்லை. ஆனால் கஷ்டப்பட்டு
கண்விழித்து நூல் எழுதி அதில் வரும் வருமானத்தையும்
கட்சிக்காகவே செலவழித்து துன்பத்தைத் துணிந்து ஏற்று
வாழும் பண்புடைய தனித்தலைவர் அவர்.

வாழ்வுக்கு மனையில்லை மனைவியருக்கு வந்த சீதன
வீட்டையும் கட்சிக் காரியாலயத்துக்கெனத் தந்திருக்கும்
தலைவர் ம.பொ.சி. ஒருவரேதான். சுருக்கமாகச் சொல்ல
வேண்டுமானால் உலகத்துக்கு உயர்ந்த தத்துவத்தை வழங்கிய
மார்க்சின் வாழ்க்கை எப்படியோ அப்படி அமைந்திருப்பது
தலைவர் ம.பொ.சி. அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை.
சீன நாட்டின் செம்மைக்காக பாடுபட்ட தலைவன் மா-
சே-துங்; இந்தோனேசிய அரசியல் தலைவன் சுகர்ணோ,
ரஷ்ய நாட்டின் இணையற்ற தலைவன் ஸ்டாலின் ஆகிய
உயர்ந்த தலைவர்களின் வரிசையிலேயே வைத்துப் பார்க்கப்பட
வேண்டியவர் ம.பொ.சி. என்றால் மிகையாகாது.
அவரிடத்திலே நான் கண்ட குறை ஒன்றே ஒன்றுதான்.
எவ்வளவோ எண்ணிப்பார்த்தபின்பும் அதை நான் சொல்லாம
லிருக்கமுடியவில்லை.

அதுதான் எப்பொழுதம் ஓய்வென்பதேயில்லாமல்
படிப்பது, எழுதுவது, அன்றைய உணவுக்கு வழியென்ன என்ற
கவலை சற்றுமின்றி பக்கத்திலிருப்பவர்களுடன் பல்வேறு
விஷயங்கள் பற்றி சர்ச்சை செயதுகொண்டிருப்பது.
உடனிருந்து பணிபுரியும் என் போன்றோர் தலைவர்
உடல்நிலைகண்டு கவலைப்படாமல் இருக்கமுடியாது. ஆனால்
கட்டாயப்படுத்தி அவரை ஓயவுபெறச் செய்ய நாங்கள்
எடுத்துக்கொண்ட முயற்சியில் ஒருநாள்கூட எங்களால் வெற்றி
பெறமுடியவில்லை.

இந்தப் போக்கைத் தனக்காக இல்லாவிட்டாலும்.
தமிழகத்தின் தமிழர்களின் நன்மையை முன்னிட்டாவது
தலைவர் ம.பொ.சி. மாற்றிக்கொள்ளத்தான் வேண்டும்,. இது
எங்கள் மாற்றமுடியாத ஆசை.
வெல்க ம.பொ.சி. யின் கொள்கை. வாழ்க அவர் புகழ்
வையம் உள்ளவரை! வளர்க அவரின் ஆயுள் பன்னெடுங்
காலம்!

This entry was posted in அறிஞர்களின் பார்வையில் ம.பொ.சி. and tagged , , , , , , , , . Bookmark the permalink.

One Response to எங்கள் தலைவர் ம.பொ.சி. – கவிஞர் கா.மு. ஷெரீப்

  1. Thanks to know about one of the GREAT Leader of our TamilNadu. The information provided by you in this web page is wonderful, useful to me. Anyway thanks. Keep it up…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − one =